

UPI சேவை முதல் பாஸ்ட் டாக் வரை.. இன்று முதல் மாறும் முக்கிய விஷயங்கள்..
ஆகஸ்ட் மாதம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) சேவை தொடங்கி பாஸ்ட் டாக் வரை பல விஷயங்களில் மாற்றங்கள் நடக்க உள்ளன.
ஆகஸ்ட் 1 முதல், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உடனடி கட்டண சேவையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. UPI பயனர்கள் PhonePe, Google Pay அல்லது Paytm போன்ற கட்டண சேவை வழங்குநர்களை நம்பியிருந்தால், பரிவர்த்தனைகள் நடைபெறும் விதத்தை இந்த விதிகள் பாதிக்கக்கூடும்.
UPI பரிவர்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிகளை செயல்படுத்த உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல், UPI பயனர்கள் ஒவ்வொரு UPI செயலியிலும் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி இருப்பை சரிபார்க்க முடியும். அதிகபட்ச நேரங்களில் Application Programming Interfaces (API) அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க இந்த கட்டுப்பாடு உதவும். NPCI இருப்பு கோரிக்கைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு வெற்றிகரமான UPI பரிவர்த்தனைக்குப் பிறகும் பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்பைக் காண முடியும். இப்போது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பேலன்சை சோதனை செய்யலாம். இனி அப்படி செய்ய முடியாது. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே செய்ய முடியும்.
தினசரி UPI பரிவர்த்தனைகளில் சுமையைக் குறைக்க, திட்டமிடப்பட்ட பில் கட்டணங்களை நிலையான நேரத்தில் செயல்படுத்தும் புதிய விதிகளும் இதில் அடங்கும். வணிகர்களுக்கான தானியங்கி கட்டணங்கள் அல்லது OTT, EMI அல்லது பரஸ்பர நிதி முதலீடுகளுக்கான மாதாந்திர திட்டமிடப்பட்ட பரிமாற்றங்கள் காலை 10 மணிக்குள் அல்லது இரவு 9:30 மணிக்கு பிறகும் நடைபெறும். அதாவது இப்போதே ஆட்டோமேட்டிக் பேமெண்ட் வேறு வேறு நேரங்களில் நடக்கிறது. இனி அதை முறையான நேரங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வருகிறது.
இன்று முதல், UPI பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பெற முடியும். அதாவது இப்போது ஸ்டேட்மென்ட் பெறுவதற்கு கட்டுப்பாடு இல்லை. இனி அதிலும் கட்டுப்பாடு வருகிறது.
நெடுஞ்சாலை துறை சார்பாக வெளியிடப்பட உள்ள வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தினசரி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2025 ஆகஸ்ட் 15 முதல் தொடங்க உள்ளது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாஸை பயன்படுத்தலாம். இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MORTH) கூற்றுப்படி, இந்த திட்டம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் ஆண்டு சுங்க கட்டணச் செலவை 70% வரை குறைக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும். இருப்பினும், டாக்சிகள், பேருந்துகள் அல்லது லாரிகள் உட்பட வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது. வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸிற்கு யார் தகுதியானவர்கள், விண்ணப்பிக்கும் முறை என்ன என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் ஃபாஸ்டேக் செயலில் இருக்க வேண்டும், மேலும் சரியான முறையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அது செல்லுபடியாகும் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அது கருப்புப் பட்டியலில் இருக்கக் கூடாது அல்லது எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கியிருக்கக் கூடாது. இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸைப் பெற பயனர்கள் ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ இணையதளம் (www.nhai.gov.in) அல்லது www.morth.nic.in ஆகியவற்றை அணுகலாம்.
ஜிஎஸ்டி மாற்றம்:
பிரதமர் அலுவலகம் (PMO) சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பை மாற்றியமைக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, முதல்முறை தற்போது மிகப்பெரிய மாற்றங்களைச் சந்திக்கவுள்ளது. ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிதாக்குவது மற்றும் வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பது ஆகிய நோக்கங்களுடன், நிதி அமைச்சகம் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும். வரி விகிதங்களை சீரமைக்க ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை..
வரி அடுக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம். தற்போது, ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5%, 12%, 18% மற்றும் 28% என ஐந்து முக்கிய வரி விகிதங்கள் உள்ளன. தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு 0.25% மற்றும் 3% என்ற சிறப்பு விகிதங்களும் உள்ளன. தற்போதுள்ள 5% வரி விதிப்பில் சுமார் 21% பொருட்களும், 12% வரி விதிப்பில் 19% பொருட்களும், 18% வரி விதிப்பில் 44% பொருட்களும் உள்ளன. அதிகபட்சமாக 28% வரி விதிப்பில் 3% பொருட்கள் மட்டுமே உள்ளன.
இதில்தான் மாற்றத்தை செய்ய உள்ளனர். அதன்படி 12% வரி விதிப்பை நீக்குவது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, 12% வரி விதிப்பில் உள்ள பொருட்கள், அவற்றின் தன்மைக்கு ஏற்ப 5% அல்லது 18% வரி விதிப்பிற்கு மாற்றப்படலாம். இதன் மூலம் ஜிஎஸ்டி முறையை எளிதாகப் புரிந்து கொள்ளவும், நிர்வகிக்கவும் முடியும். இதனால் பல பொருட்களின் விலை அடியோடு மாறும். வரவிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTAs) பொருளாதாரத்தை தயார்படுத்துவதற்கான ஒரு பகுதியாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்யுமாறு அரசாங்கத்தை தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.