

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 81 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
வாடகை பாக்கி செலுத்தாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது
மரக்கடை, மேலபுலிவார் ரோடு , ராஜா பார்க் போன்ற பகுதிகளில் உள்ள 81 கடைகள் தனியாருக்கு வாடகைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் மரம், எலக்ட்ரிகல், ஆயில், பிளாஸ்டிக், டைல்ஸ், செங்கல் போன்ற பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்த கடைக்காரர்கள் கடந்த 2 முதல் 5 வருடங்களுக்கும் மேலாக வாடகை செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி உள்ளது. மாநகராட்சி பழைய வாடகையையே வசூலித்து வந்தது. ஆனால், இப்போது புதிய, கூடுதல் வாடகையை செலுத்தும்படி அறிவுறுத்தியது.
ஆனால், இந்த 81 கடைகளின் உரிமையாளர்களும் புதிய வாடகையை செலுத்தவில்லை. மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கடையை இரண்டாகப் பிரித்து உள்வாடகைக்கு விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இன்று 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில கடைகளின் பூட்டுகள் திறக்கப்படாததால், கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டன. பின்னர், மாநகராட்சி சார்பில் புதிய பூட்டுகள் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி 2023 விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“5 வருடங்களுக்கு மேலான வாடகையை உடனே செலுத்த வேண்டும். புதிய கூடுதல் வாடகையையும் கட்ட வேண்டும். இல்லையென்றால், கடையின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கடைகள் முழுமையாக மாநகராட்சியால் கையகப்படுத்தப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.