

துறையூர், ஜன. 18:
பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் (TRIARD) இறுதி ஆண்டு பயிலும் வேளாண் மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE) ஒரு பகுதியாக, துறையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீரம்பூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு ‘அசோலா’ வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியை அளித்தனர்.தற்போது ரசாயன உரங்களின் விலை உயர்வு மற்றும் மண்ணின் தரம் குறைந்து வரும் சூழலில், குறைந்த செலவில் அதிக பலன் தரும் ‘அசோலா’ எனப்படும் நீர் பெரணி வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.கால்நடைத் தீவனச் செலவைக் குறைத்து பால் உற்பத்தியைப் பெருக்கவும், நெல் வயல்களில் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவும் இந்த அசோலா நீர் பெரணியை, நிழலான இடத்தில் பாலித்தீன் விரிப்புகள் அமைத்து மிகக் குறைந்த செலவில் வளர்க்கும் முறையை மாணவர்கள் கிராம விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை மூலம் விளக்கிக் காட்டினர்; புரதச் சத்து மிகுந்த இந்த அசோலாவை பசுக்கள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாக அளிப்பதன் நன்மைகள் குறித்தும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் மாணவர்கள் எடுத்துரைத்த இந்த முகாமில், கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.