

உய்யக்கொண்டான் வாய்க்கால் பராமரிப்பு புறக்கணிப்பு – விவசாயிகள் கவலை
திருச்சியின் முக்கிய பாசன ஆதாரமாக உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் தற்போது பராமரிப்பு இன்றிக் கவலைக்குரிய நிலையில் உள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலப்பதால், அது முழுவதும் மாசடைந்து விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
அரியமங்கலம் முதல் காட்டூர் மஞ்சதிடல் வரை அமைக்கப்பட்ட 15 குழுமிகளும் சேதமடைந்து செயலிழந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து குப்பைகள், உயிரிழந்த விலங்குகள் வீசப்படுவதால் குழுமிகளில் அடைப்பு ஏற்பட்டு பாசன நீர் பாய்ச்சல் தடைபடுகிறது.
பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து, குழுமிகளை சீரமைத்து, கழிவுநீர் கலப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.