
திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு: வெளிநாட்டு கைதிகள் மோதல் – கதவுகள் உடைப்பு, தப்பிச் செல்ல முயற்சி

திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு: வெளிநாட்டு கைதிகள் மோதல் – கதவுகள் உடைப்பு, தப்பிச் செல்ல முயற்சி
திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டு வெளிநாட்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டவிரோத குடியேற்றம், விசா காலாவதி, மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இங்கு வைக்கப்பட்டிருந்த கைதிகள் சண்டையிட, மற்ற கைதிகளும் பாதுகாப்பு அச்சத்தில் உறைந்தனர்.
அதிரடி சூழ்நிலை காரணமாக மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் நள்ளிரவில் முகாமுக்கு நேரடியாக சென்று இருதரப்பு கைதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோதல் நடக்கும் போது சிறப்பு முகாமின் கதவுகளை உடைத்து தப்ப முயன்ற 6 வெளிநாட்டு கைதிகளை போலீசார் தடுத்து கைது செய்தனர். அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.