

நல்லவன்னிபட்டி, 2026 ஜன. 12 துறையூர் அருகே வேளாண் கல்லூரி மாணவர்கள் அனுபவத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் அண்மையில் சிறப்பாக தொடங்கியது.
தொடக்க விழா நல்லவன்னிபட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடதில் நடைபெற்றது. வேளாண் அலுவலர் திரு கமல் சி, உதவி வேளாண் அலுவலர் திரு மனோகர் மற்றும் இயற்கை விவசாயி ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் நோக்கம் வேளாண் மாணவர்கள் கிராமங்களில் தங்கி, விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறை, சாகுபடி நுட்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை நேரடியாக கண்டறிந்து, அவற்றுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகளை வழங்குவதே முக்கிய நோக்கமாகும். வேளாண் அதிகாரிகள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவர்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டிய மண் பரிசோதனை, பூச்சி மேலாண்மை மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களின் ஒதுக்கப்பட்ட கிராமங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், வேளாண் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 60 நாட்கள் களப்பயணம் மாணவர்களின் எதிர்கால வேளாண் பணிக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று விழாவில் தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாணவர்கள் நன்றியுரை ஆற்றினர்.